

Kaanal Vadu

Alaiyum Vaalvum
மனதிடம் பேசு, கானல் வடு எனும் இரண்டு படைப்புகளுக்குப் பிறகு வள்ளவிளை மக்களின் வாழ்வியலையும் வரலாற்றையும் இந்த தலைமுறைக்கு எடுத்துச் சொல்வதோடு, வரும் தலைமுறைக்கும் கடத்தும் விதமாக ‘அலையும் வாழ்வும்’ எனும் தனது மூன்றாவது நூலை தந்திருக்கிறார் எழுத்தாளர் ஜெ. சுனில். வரலாறு இல்லாத சமூகம் இல்லை. அதேவேளை, ஒரு சமூகத்துக்கு வரலாறு இருந்தால் மட்டும் போதாது, அச்சமூகத்தின் அடுத்த கட்ட நகர்வுக்கும் வளர்ச்சிக்கும் அந்த வரலாறு பதிவு செய்யப்படல் மிக அவசியம். குமரி மாவட்டத்தின் ஒவ்வொரு கடலோர கிராமத்திற்கும் ஒரு வரலாறு உண்டு. அதிலும் குறிப்பாக வள்ளவிளை போன்ற மிகப் பிரதானமான கிராமங்களுக்கு நீண்ட நெடிய வரலாறு உண்டு. இது போன்ற வரலாறுகள் வாய் வழியாக பேசப்பட்டோ அல்லது ஆண்டு மலர் போன்றவற்றில் எழுதப்பட்டோ காலப்போக்கில் அவை ஒன்றுமில்லாமல் போவதுண்டு. அவ்வாறு ஆகிவிடாமல் இருக்க தனது கிராமத்தைக் குறித்து கள ஆய்வுகள் செய்தும், வயதுக்கு முதிர்ந்தவர்களிடமிருந்து தரவுகளை கேட்டுணர்ந்தும், பலரது நூல்களிலிருந்து தரவுகளை சேகரித்தும் அவைகளையெல்லாம் ஒன்றுதிரட்டி ஒரு நூலாக எழுதி வெளிக்கொண்டு வந்திருக்கும் ஜெ. சுனில் அவர்களுடைய முயற்சி பாராட்டுக்குரியது.
வள்ளவிளை ஓர் அறிமுகம் எனும் முதல் பகுதி கி.பி 1329 ல் கொல்லம் மறைமாவட்டம் உருவானபோது அதனுடன் இணைந்து இருந்ததில் தொடங்கி இன்று வரையிலுள்ள வள்ளவிளை குறித்த விரிவான விவரங்களை தருகிறது. மக்கள் வசிக்காத பகுதியான எடப்பாடு முதலில் ஆச்சந்துறை கிராமமாக இருந்ததும், வள்ளவிளை முதலில் தலவிளை என அறியப்பட்டதும், கத்தோலிக்கர்களுக்கும் புரொட்டஸ்டான்றுகளுக்கும் இடையே கலவரம் நிகழ்ந்ததும் புது அறிவாகவே இருந்தது. வள்ளவிளைளயில் திருப்பலி நிறைவேற்ற போர்த்துக்கீசிய அருட்தந்தையர்கள் பூவாரிலிருந்து குதிரையின் மீது ஏறிவந்து திருப்பலி நிறைவேற்றியதையும், கிளை பங்குகளுக்கு AVM கால்வாயில் வள்ளத்தில் ஏறிச்சென்று திருப்பலி நிறைவேற்றியதையும் வாசிக்கும்போது பழைய காலம் அழகியலாய் கண்முன்னே வந்துநிற்கிறது.
தேவாலயத்தை மீட்க கொல்லம் ஆயர் தொடுத்த வழக்கை திரு. ஜோசப் அல்காந்தர் முறியடித்த சாதனையும், பள்ளிக்கூடத்தில் ஒரு சீட்டுக்கே மாறி மாறி சண்டை போடும் இக்காலத்தை ஒப்பிடுகையில் எவ்வித பணமும் பெறாமல் ஒரு பள்ளியையே வேறு ஊருக்கு கொடுத்த வள்ளவிளை மக்களின் தாராள குணமும் பிரம்மிப்பூட்டுகிறது. மட்டுமல்ல, அன்பியங்கள், கான்வென்ட், குருசடிகள், தேவாலயம், விளையாட்டு மைதானம், நூலகம் என ஒவ்வொன்றிலும் ஏற்பட்ட மாற்றங்களும் ஏற்றங்களும் மிக நேர்த்தியாக விவரித்து தந்திருக்கிறார் நூலாசிரியர்.
பொதுவாக ஒவ்வொரு ஊரிலும் குருசடிகள் அந்த ஊர் சார்பிலேயே கட்டப்படும். ஆனால் வள்ளவிளையில் அமைந்துள்ள ததேயுபுரம் குருசடி புதிய துறையைச் சார்ந்த திரு. கலிஸ்ட் கட்டிக் கொடுத்தார் என்பதும், நடைபாலத்திலுள்ள மாதா குருசடி ஒரு இஸ்லாமிய பெண்ணால் கட்டிக் கொடுக்கப்பட்டது என்பதும், தேவாலயத்தில் உள்ள கொடிமரம் கடலில் மிதந்துவந்து கிடைத்ததும் ஆச்சரியம் தரும் தகவல்கள்தான். அதேபோன்று வள்ளவிளை பங்கு 1996 முதல் 2012 வரை சலேஷியன் சபையில் ஒப்படைக்கப்பட்டதால் ஊரில் வளர்ச்சி ஏற்பட்டதோடு, தமிழ் மொழி மீது மக்களுக்கு காதலும் அதிகமானது எனும் தகவலும், இளம் தலைமுறைக்காக சிறப்பானதொரு விளையாட்டு அரங்கத்தை பெற்றதும் சந்தோஷம் அளிக்கிறது. அதேவேளை, நூலகத்திற்கு பெயர் பெற்ற வள்ளவிளை கிராமத்தில் தற்போது நூலகம் கவனிக்கப்படாமல் கிடப்பது பெரும் வருத்தம் தருகிறது.
நூலின் இரண்டாவது பகுதியில் தொழில் மற்றும் வாழ்வியல் நம்பிக்கைகளை சிறப்பான முறையில் தொகுத்து தந்திருக்கிறார் நூலாசிரியர் ஜெ. சுனில். தவக்கால தூம்பா பவனி, தவக்காலத்தின் ஒப்பாரி பாடல்கள் எவ்வளவு சிறப்பு பெற்று இருந்தது என்பதோடு கரைமடி தொழிலுக்கு எவ்வளவு சிறப்பைக் கொண்டு வள்ளவிளை திகழ்ந்தது போன்றவை இதில் முக்கியமானதாக இருக்கிறது. கூடவே வழுவலை வள்ளம், கட்டுமரம், பிளைவுட், விசைப்படகு, விசைப்படகின் நவீன தொழில் நுட்பங்கள், முடக்கு காலம், மீன்காரிகள் மற்றும் முறுக்கான் போன்றவற்றின் சிறப்புகளும் சிறப்பாகவே விவரிக்கப்பட்டிருக்கிறது.
அதேபோன்று, மூன்றாவது பகுதியில் மக்களின் பிறப்பு, பூப்பு நீராட்டு விழா, திருமணம், இறப்பு என பல்வேறு சடங்கு முறைகள் குறித்தும், நான்காவது பகுதியில் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகள் குறித்தும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகம் முழுக்க பேசுவது தமிழ்தான் என்றாலும் ஒவ்வொரு மாவட்டத்திற்கும், அதன் ஒவ்வொரு பகுதிக்கும் வெவ்வேறு வழக்காடு மொழிகளைக் கொண்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்ட மீனவ கிராமங்களை பொறுத்தமட்டில் ஒவ்வொரு கிராமத்திற்கும் தனித்தனி மொழி நடை இருக்கிறது. வள்ளவிளையின் தனித்துவமிக்க மொழி நடையையும், மக்கள் பேசும் வார்த்தைகளையும் அதற்கான சுத்தமான தமிழ் வார்த்தையும் தந்திருக்கிறார். சொல்லப் போனால் இம் மக்கள் பேசுவது மலையாள கலப்பு அல்ல ஆதி தமிழ்! இதனை திருக்குறள், தொல்காப்பியம் போன்றவற்றிலுள்ள வார்த்தைகள் மூலம் தெளிவுபட தந்துள்ளது சிறப்பு. கூடவே அவர்கள் பேசும் பழமொழிகள், விளையாடும் விளையாட்டுக்கள், மீன் பிடிக்கும்போது பாடும் பாடுகள் போன்றவற்றையும் ஐந்தாவது பகுதியில் நமக்கு தந்துள்ள ஜெ. சுனில் பிறகு வரும் ஆறு முதல் பத்து வரையிலான பகுதிகளில் மீனவர்கள் கடலில் பயன்படுத்தும் பொருள்கள் குறித்தும், விசைப்படகு செல்லும் திட்டைகள், வலைகளின் பெயர்கள், நட்சத்திரங்களின் பெயர்கள், கடல் காற்றின் பெயர்கள் போன்றவற்றை தொகுத்துத் தந்துள்ளார்.
வள்ளவிளை குறித்த தரவுகளோடு நிறுத்திக் கொள்ளாமல் உரிய புகைப்படங்களையும் காட்சிப்படுத்தி தந்துள்ளது நூலுக்கு மேலும் சிறப்பு சேர்க்கிறது. இந்நூல் வள்ளவிளை குறித்த தனித்துவமிக்க நூலாக இருப்பினும் மீனவ மக்கள் சார்ந்த பெரும்பாலான தரவுகள் பொதுவானவைகளாகவே இருக்கும். அந்த வகையில், வள்ளவிளை குறித்து மட்டுமல்ல குமரி மாவட்ட மீனவ மக்களின் வாழ்வியல் குறித்து அறியவும் ஆய்வுகள் மேற்கொள்ளவும் இந்நூல் நிச்சயம் துணைபுரியும்.
வள்ளவிளை மக்கள், இது நம்முடைய வரலாறுதானே… நமக்கும் தெரிந்ததுதானே என்று விட்டுவிடாமல் ஒவ்வொரு இல்லத்திலும் இந்நூல் இடம் பெற அனைவரும் இந் நூலை நிச்சயம் வாங்க வேண்டும். ஜெ. சுனில் அவர்களுக்கு இருக்கும் அக்கறையை பார்க்கையில் தொடர்ந்து பல்வேறு அரிய நூல்களை நம் நெய்தல் சமூகத்திற்காகவும், தமிழ் கூறும் நல்லுலகிற்காகவும் படைத்து தருவார் என்கிற நம்பிக்கை இருக்கிறது.